Friday 1 May 2020

Min:-ROUF_HAKEEM Reed & share share share

கொவிட் - 19 தொற்று நோய் நிலைமை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன ரீதியாக இலக்குவைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்தும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், நாட்டில் குறிப்பாக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருபதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் தெரிவித்துள்ளார். உலகெங்கும் அனுஷ்டிக்கப்படும் மே தினம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்லாம் தொழிலாளர்களின் உரிமைகளை சரிவர வழங்கியிருப்பதனால், முஸ்லிம் காங்கிரஸ் ஆண்டு தோறும் மே தினத்தைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொள்ளவில்லை. ஏனென்றால், தொழிலாளர்களின் வியர்வை உலர்வதற்கு முன்னர் அவர்களது ஊதியத்தை வழங்கிவிடுமாறு இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறிய நபிமொழி சுனன் இப்னு மாஜா கிரந்தத்தில் (2443) பதிவாகியுள்ளது. கொவிட் -19 நோய்த் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பின்மை, பணிக் குறைப்பு, சம்பளம் வழங்கப்படாமை போன்ற பல்வேறு காரணிகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்கூட அரசாங்கத்திடம் மானியம் கேட்டு குரல் எழுப்பும் நிலைமைக்கு தொழிலாளர்கள் ஆளாகியுள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை கொவிட் -19 விவகாரம் கையாளப்படும் விதம் நிலைமையை மிகவும் சிக்கலாக்கியுள்ளது. அரசியல் உள்நோக்கங்களோடு, நோய் பரவல் பற்றிய அச்ச உணர்வு மேலோங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றார்கள். பல மாவட்டங்களில் அவர்களது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை உட்பட சில மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களாக நீடிக்கப்பட்டிருப்பதன் விளைவாக அன்றாடம் தொழிலுக்குச் செல்வோரும், நாளாந்தம் கூலித் தொழில் புரிவோரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் அக்குறணை, அட்டுலுகம போன்ற பிரதேசங்களில் ஓரிருவர் கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டதற்காக, அவ்வாறான பிரதேசங்களிலிருந்து ஏராளமானோர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அக்குறணையில் 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்போர் முடக்கப்பட்டுள்ளதனால் அங்குள்ளோரின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் தனவந்தர்கள் வழங்கிவரும் நிவாரண உதவிகளைத் தவிர அரசாங்கத்தினால் உரிய கவனஞ் செலுத்தப்படவில்லை. நாட்டில் பொதுவாக அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாகக் கூறப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவுக்காக அப்பாவி பொதுமக்கள் தங்களது தன்மானம், சமூக அந்தஸ்து என்பனவற்றை இழந்து நீண்ட வரிசைகளில் கால் கடுக்க தவம் கிடக்க வேண்டிய நிலைமை ஊடகங்களில்கூட சர்வசாதாரணமகக் காண்பிக்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் சர்ச்சைக்குள்ளாகி சட்டம் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிக்குள் நாடு சிக்குண்டுள்ள நிலையில் கொவிட் - 19 நோய் நிலைமையை அரசியல் உள்நோக்கங்களுடனும், இனவாதச் சிந்தனையுடனும் தொடர்ந்து அணுகுவது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையே சீர்குலைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தும். அத்துடன் தொழில் இழப்பு வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற்றின் விளைவாக பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னெப்போதும் இல்லாதவாறு பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படுகின்றன. ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - #Rouf_hakeem

No comments: