Wednesday 6 May 2020

இலங்கையில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகாரிப்பு! எவ்வளவு தெரியுமா?


கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 24 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி அடையாளம் காணப்பட்ட 795 தொற்றாளர்களில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொரோனாவால் இலங்கையில் முதலாவது மரணம் பதிவானது. அது முதல் இரு பெண்கள் உட்பட 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 28 ஆம் திகதி மாரவில பகுதி நபர் ஒருவரும், 30 ஆம் திகதி நீர்கொழும்பு போரத்தொட்டை பகுதி நபர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மருதானை பகுதியில் ஒருவரும், 2 ஆம் திகதி இரத்மலானையைச் சேர்ந்த ஒருவரும், 4 ஆம் திகதி ஹோமாகமவை சேர்ந்த ஒருவரும் 7 ஆம் திகதி தெஹிவளையைச் சேர்ந்த ஒருவரும், 8 ஆம் திகதி கல்கிசையைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். அதன் பின்னர் உயிரிழப்புக்கள் பதிவாகாத நிலையில், இம்மாதம் 4,5 ஆம் திகதிகளில் இரு பெண்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். குருணாகல் - பொல்பித்திகமவைச் சேர்ந்த ஒருவரும் கொழும்பு 15 - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். அதன்படி இதுவரை உயிரிழந்துள்ள 9 தொற்றாளர்களில் 6 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தோர் ஆவர். ஏனைய மூவரில் ஒருவர் கம்பஹா மாவட்டத்தையும் மற்றையவர் குருணாகல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர். இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 345 பேர் கடற்படை வீரர்களாவர். அவர்களில் 8 பேர் இதுவரை பூரண சுகம் பெற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவித்தன. இன்று மட்டும் 2 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். இந் நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றின் பின்னர் குணமடைந்தோர் எண்னிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் மேலும் 571 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 153 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 41 பேரும், உள் நாட்டிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட 64 பேரும் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். இதனைவிட முப்படைகளைச் சேர்ந்த 356 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 345 பேர் வெலிசறை மற்றும் ரங்கல கடற்படை முகாம்களைச் சேர்ந்தவர்களாவர்.

No comments: